கடந்த வாரம் சத்தீஸ்கரில் நடந்த தேர்தல் பேரணியில் தேசிய உணவு பாது காப்புச் சட்டத்தின் பயனாளிகளுக்கு ஒவ்வொரு மாதமும் 5 கிலோ உணவு தானியங்கள் இல வசமாக வழங்கும் பிரதம மந்திரி கரீப் கல்யாண் அன்ன யோஜனா திட்டத்தை 5 ஆண்டுகளுக்கு நீட்டிப்ப தாக பிரதமர் அறிவித்தார். ஏனென்றால் எந்த குடிமக னும் பசியுடன் தூங்குவதை அவர் விரும்பவில்லை. அதாவது 2028 ஆம் ஆண்டிலும் 80 கோடி இந்தியர் கள் இலவச உணவு தானியங்களை பெற்று தான் பசியை போக்கிக் கொள்வர். இந்த ஆண்டில் தான் ஐந்து டிரில்லியன் டாலர் ஜிடிபியுடன் மூன்றாவது பெரிய பொருளாதாரம் ஆக இந்தியா மாறும் என அரசாங்கம் எதிர்பார்க்கிறது.
ஐந்து டிரில்லியன் டாலர் மொத்த உள்நாட்டு உற்பத்தியிலும் பெரும் எண்ணிக்கையிலான இந்தி யர்கள் பசியுடன் தான் இருப்பார்களா? அப்படியா னால் அந்த வேகத்தில் ஐந்தாண்டுகளில் இந்த இலக்கை அடைவது யாருக்காக?
ஜப்பான் “வளர்ச்சி”யின் கதை!
ஜப்பான் உலகின் மொத்த உள்நாட்டு உற்பத்தி யில் மூன்றாவது பெரிய பொருளாதாரம் ஆகும். இங்கே ஒவ்வொரு 20 நிமிடங்களுக்கும் ஒருவர் தற்கொலை செய்து கொள்வதாகக் கூறப்படுகிறது. சுமார் 15 லட்சம் ஜப்பானியர்கள் பல ஆண்டுகளாக தங்கள் வீட்டை விட்டு வெளியே வரவில்லை. ஹிக்குகோ மோரி எனப் படும் கடுமையான சமூக விலகலில் இருக்கிறார்கள்.
பெற்றோர்களை பார்க்க பிள்ளைகள் வருவது நின்று போனதால் ஞாயிற்றுக்கிழமைகளில் நடிகர் களை வீட்டுக்கு வரவழைத்து கட்டணம் செலுத்தி தங்களை அம்மா என்றும் அப்பா என்றும் அழைக்கு மாறு கெஞ்சும் நிலை.இறந்துபோனவர்கள், ஒவ்வொரு நாளும் சில நாட்கள் அல்லது சில வாரங்களுக்கு பிறகு அடுக்குமாடி குடியிருப்புகளில் கண்டுபிடிக்கப்படு கிறார்கள். இவை கொட்டோ குஷி அல்லது தனிமை மரணங்கள் என அழைக்கப்படுகின்றன.
மூன்றாவது பெரிய பொருளாதாரம் ஜப்பானி யர்களின் எல்லாருடைய வாழ்க்கைத் தரத்தையும் சமமாக உயர்த்தவில்லை. குடும்பம் மற்றும் சமூக உறவுகளின் பாதுகாப்புகளை அது அகற்றி விட்டதால் பலவீனமானவர்களை மேலும் நலிவடையச் செய்து விளிம்பு நிலைக்கு தள்ளிவிட்டது.
உற்பத்தி மற்றும் ஏற்றுமதி வளர்ச்சியின் மூலம் நாற்பது வருடமாக ஜப்பான் உலகின் இரண்டாவது பெரிய பொருளாதாரமாக திகழ்ந்தது. ஆனால் 2008 உலக நிதி நெருக்கடிக்கு பிறகு அதன் பொருளாதாரச் சக்கரங்கள் கழன்று கொண்டன. ஏற்றுமதி சுருங்கியது. அரசின் முதலீடுகள் வறண்டன. மக்களும் செலவு களை குறைத்துக் கொள்ளத் துவங்கினர். மறுபுறத்தில் சீனா, உற்பத்தியில் வளர்ச்சி அடைந்ததன் காரணமாக மொத்த உள்நாட்டு உற்பத்தியில் உலகில் இரண்டா வது பெரிய பொருளாதாரமாக வளர்ந்து ஜப்பானின் இடத்தை கைப்பற்றியது.
கர்வம் இல்லாத அணுகுமுறை
இருப்பினும் ஜப்பான் கர்வம் துளியும் இல்லாமல் ஒரு பொருளாதார ராஜதந்திரத்துடன் நடந்து கொண்டது. பொருளாதாரம் மூன்றாம் நிலைக்குச் சென்றவுடன் ஜப்பானின் தலைமை சீனாவின் உயர்வை பகிரங்கமாக வரவேற்றது. அதிக மக்கள் தொகை கொண்ட நாடு வளர்வதும் அதன் தேவை அதி கரிப்பதும் தங்கள் நாட்டின் ஏற்றுமதிக்கு நல்லது எனக் கூறியது. நிலைமையைச் சமாளிக்க இப்படி கூறினா லும், இரண்டு பொருளாதாரங்களும் உடனடியாக பின்னிப்பிணைந்தன. இன்று சீனா ஜப்பானின் மிகப்பெரும் வர்த்தகப் பங்காளியாக உள்ளது.உலக அரசியல் பொருளாதாரத்தில் நீங்கள் விஸ்வகுருவாக இருக்கலாம். உங்களின் போட்டியாளர்களை எப்படி நீங்கள் அரவணைக்கிறீர்கள் என்பது தான் மிகவும் முக்கியமானது என்பதை இது நிரூபிக்கிறது. இந்த கர்வம் இல்லாத அணுகுமுறையும் செயல்பாடும் கடந்த 14 ஆண்டுகளாக உலகின் மொத்த உள்நாட்டு உற்பத்தி தரவரிசையில் ஜப்பான் மூன்றாவது இடத்தி லேயே நீடித்து நிற்பதை உறுதி செய்திருக்கிறது.
மீண்டும் ஜப்பானின் கதைக்கே திரும்புவோம்!
உயர் மதிப்புள்ள தொழில்துறை பொருளாதாரம் முக்கியப் இடத்தைப் பிடித்ததால் தனிப்பட்ட மற்றும் தொழில்துறை உறவுகளின் வலிமை வறண்டு போனது. பல தலைமுறையை கொண்ட குடும்பங்கள் சிதறிப் போயின. தனித்தனி சிறு குடும்பங்களாக உடைந்தன. பாரம்பரியத் திறமை கொண்ட தொழிலாளர்களின் வாழ்வில் இது பெரும் புயலாய் வீசியது. புதிதாக முளைத்த நகர்ப்புறங்கள் மற்றும் கிராமங்களில் இருந்து தொழிலாளர்கள் ஊதியத்தை எதிர்பார்த்து நகரங்களுக்கு சென்றனர். ஆனால் உயர் வளர்ச்சித் துறைகளில் அடிக்கும் சுனாமி போன்ற பாய்ச்சல் மிகுந்த தொழில்நுட்ப மாற்றங்களுக்கு அவர்களால் ஈடு கொடுக்க முடியாததையும் உணர்ந்தனர்.பொருளா தார இழப்பு என்ற ஆற்றில் விழுந்து சமூக வில கலுக்கும் ஆளாயினர்.
ஒரு ஆழமான பிளவு!
இந்தியா இன்று ஒரு பொருளாதார சுனாமியின் உச்சியில் இருப்பதாக அரசு கூறுகிறது. ஐந்து டிரில்லி யன் டாலர் என்னும் இலக்கை அடைவது குடிமக்க ளுக்கு குறிப்பாக 2028இல் இலவச ரேசனை நம்பி இருக்கும் எண்பது கோடி மக்களுக்கு எப்படி சாதகமாக இருக்கும்? மூலதனம், உற்பத்தி, உழைப்பு மூன்றும் தான் நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு அச்சாணி என்ற நிலையில் நான்கில் ஒரு பங்கு இந்தியர்களுக்கு கூட, ஐந்து டிரில்லியன் டாலர் பொருளாதார இலக்கை அடைவதற்கான பாலத்தை எட்ட முடியாத தாகவே இருக்கும் என்று பொருளாதார வளர்ச்சி மையங்களின் தரவுகள் காட்டுகின்றன.
மூலதனத்தை ஆய்வு செய்வோம்!
2021 ஆம் ஆண்டில் ஒரு சதவீதம் பேர் நாட்டின் செல்வத்தின் 49 சதவீதத்தை வைத்திருந்தனர். ஆனால் 50 சதவீதம் பேர் 3 சதவிகிதம் செல்வத்தை பகிர்ந்து கொண்டனர் என ஆக்ஸ்பாம் அறிக்கை தெரிவிக்கிறது. 5 டிரில்லியன் டாலர் இலக்கை வேக மாக அடைவது என்பது அனைத்து வளங்களையும் கைப்பற்றி வைத்துள்ள அதிகாரத்தரகர்களின் முயற்சியை பொறுத்தது. ஆனால் ஐந்து டிரில்லியன் டாலர் பொருளாதார வலிமைக்கான முதலீட்டை கொண்டு வருபவர்கள் குறைந்த வளங்களை கொண்ட குடிமக்களே!
மக்கள் தொகையில் கீழ் மட்டத்தில் இருக்கும் 50 சதவீத மக்களிடமிருந்து ஜிஎஸ்டி மூலம் 64 சதவீத வரித் தொகையும் உயர் மட்டத்தில் இருக்கும் 10 சதவீத மக்களிடமிருந்து 3 சதவிகித வரித் தொகையும் திரட்டப் படுகிறது. அதே நேரத்தில் கல்வி அறிவு, திறமை மற்றும் டிஜிட்டல் திறன் இன்மை என்ற காரணங்களின் பேரில் உற்பத்திக்கு உந்து சக்தியாக விளங்கும் தொழிலா ளர்களின் பங்களிப்பும் தடை செய்யப்படுகிறது. டிஜிட்டல் மற்றும் உண்மையான உள்கட்டமைப்பை உருவாக்குவதன் மூலம் தான் உற்பத்தித் திறன் ஒரு ஊக்கத்தைப் பெறத் துவங்கும்.
2029 பொதுத் தேர்தலுக்கு முன்னதாக ஐந்து டிரில்லியன் இலக்கை வழங்கிட பணக்காரர்கள் ஒரு சாதகமான நிலைக்கு நகர்கிறார்கள் என்பதை அரசாங்கம் அறிந்துள்ளது. வெளிநாட்டில் இந்தி யாவின் செல்வாக்கையும் உயர்த்தி உலகில் பிரத மரின் முதன்மையையும் இது உயர்த்தும் என்பது தெளிவாகிறது.
இந்த இலக்கை அடைவதற்கான அரசாங்கத்தின் கருவிகள் மற்றும் துறைகளை நிதித்துறை இணை அமைச்சகர் பங்கஜ் சவுத்ரி 2023 நாடாளுமன்றத்தில் பேசும் பொழுது அடையாளம் காட்டினார். டிஜிட்டல் பொருளாதாரம், நிதி தொழில்நுட்பம், ஆற்றல் மாற்றம், காலநிலை மாற்றம், ஜிஎஸ்டி, திவால் சட்டம் மற்றும் குறியீடு, கார்ப்பரேட் வரிச் சலுகைகள், மேக் இன் இந்தியா, ஸ்டார்ட் அப் இந்தியா உற்பத்தியு டன் இணைந்த ஊக்க தொகைகள் இவை எல்லா வற்றையும் கொண்ட ஒரு உள்ளடக்கிய வளர்ச்சி தேவை என்றும் குறிப்பிட்டார்.
ஆனால் இந்த அதிநவீனத் துறைகளும் கருவிக ளும் விளிம்பு நிலையில் ஒதுக்கப்பட்டு நிற்கும் 80 கோடி மக்களுக்கு சொந்தமானதல்ல. செயற்கை நுண்ணறிவு, தரவு அறிவியல், ரோபோடிக்ஸ் ஆகிய துறைகளில் வழங்கப்படும் வேலை வாய்ப்புகளை இப்போது அவர்களால் கைப்பற்ற முடியாது. அடுத்த ஐந்தாண்டுகளிலும் கூட முடியாது.
ஐந்து டிரில்லியன் டாலர் இலக்கு இந்தியாவில் ஏற்பட்டுள்ள பிளவை மேலும் ஆழமாக்குமா? இரண்டு இந்தியாவாக அது தொடருமா?இந்த இலக்கை அடை வதற்கான பாதையில் இந்தியா செல்லலாம். ஆனால் அதன் பெரும்பாலான மக்கள், சொகுசு வண்டிகள் தங்களை கடந்து செல்வதை பார்த்தபடி மெதுவாக நடந்து வந்து கொண்டிருப்பார்கள்.
கட்டுரையாளர் : டிவி லைவ் இந்தியா (பி) லிட்
நிறுவனத்தின் நிர்வாக ஆசிரியர், தி இந்து 24/11/23.
தமிழில் : கடலூர் சுகுமாரன்